எனக்கு இந்த நகரம் காட்டிய வானத்தின் அளவு மூன்றடிக்கு ஒன்றரை அடி. நான் அதிர்ஷ்டசாலி . என் வீட்டு வாசலில் முளைத்த பூசணிக்கு கிடைத்த நிலத்தின் அளவு வெறும் ஒரு அடிக்கு ஒரு அடிதான். அதில் எனக்கொரு அற்ப சந்தோஷம்.
ஒரு நாள் மண்ணுக்குள் இருந்து இந்த கான்க்ரீட் காட்டை எட்டிப்பார்த்து இந்த பூசணிக்கொடி, அடித்துச்சொல்கிறேன் போடோசிந்தேசிஸ் இதற்க்கு கிடைப்பது சிரமம்தான், எப்படி கிடைக்கும் சிமென்ட் மலைகள் இதனை நெருக்கிக்கொண்டல்லவா நிற்கின்றன... எனக்கு தெரிந்து ஒரு துளி நீர் அதன் தலையில்படவில்லை. இன்று மாலை, யாருடைய கால்கலாலாவது நசுக்கப்பட்டுவிடும் என்று எண்ணி நானும் பூசணிக்கொடியை குளிப்பாட்டவும் இல்லை, நசுக்கவும் இல்லை.
அடுத்த நாள் காலை, நான் அவசரமாக கிளம்பும்போது என்னை பார்த்து கை நீட்டியது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? நானும் நகரத்தான் தானே.. கை கொடுக்காமல், விபத்து நடந்த இடத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு கிளம்பும் அனைவரையும் போல நானும் கிளம்பினேன் இருசக்கர வாகனத்தில், அதற்கு மூச்சுத்தினரலை உண்டாக்கிவிட்டு....
மறுநாள் மிகத்திமிராக அந்த பூசணிக்கொடி வீட்டுக்காரராகிய என் அப்பாவிடம் கூட கேட்காமல் எங்களுக்கு சொந்தமான மிக பிரம்மாண்டமான அந்த ஒரு சதுரடி இடத்தில் மேலும் நான்கு ஐந்து இலைகளை பரப்பியது. ஆனால் இந்த கான்க்ரீட் காட்டில் இந்த பூசணிக்கொடிக்கு ஒரு நல்லவிஷயமும் இருக்கிறது. கிராமம் என்றால் ஆடு, மாடு, கோழி என்று பல எதிரிகள் இருக்கிறார்கள், நகரத்தில் நாம்தானே இருக்கிறோம்.
ஆனால் அதற்கும் ஒரு நாள் வில்லன் வந்தான், என் நண்பன், என்னிடம் வந்து "பூசணிக்கொடி வீட்டின்முன் இருக்கக்கூடாது கெடுதல்" என்று கூறினான். யாருக்கு கெடுதல் நமக்கா? இல்லை அந்த பூசணிக்கொடிக்கா என்று கூறவில்லை. நானும் நேராக என் அப்பாவிடம் சென்று இதனை கூறினேன். நான் கூறுவதற்கு எப்போதுமே எதிர்வாதம் பேசும் என் அப்பா, அன்றைக்கும் எதிர்த்தே பேச தப்பித்தது பூசணி சனியில் இருந்து.....
அதற்கு அடுத்தநாள் , எங்கள் வீட்டின் இரும்பு கேட்டில் பூசணிக்கொடி கை போட்டு பேசிக்கொண்டிருந்தது. கேட்டிடம் பேசி சம்மதம் வாங்கி அதன் மீது ஊற ஆயத்தமாகியது. சரி, அந்த நட்பில் நாம் ஏன் நுழையவேண்டும்? அது அவர்கள் பாடு என்று ..... மறுபடியும் அதற்கு மூச்சுத்தினரலை உண்டாக்கிவிட்டு கிளம்பினேன்.
மாலை வந்து பார்த்தால் அந்த நட்பில் விரிசல் விழுந்திருந்தது. அது தானாக விழுந்த விரிசலா அல்லது நம்மினம் செய்ததா என்று தெரியவில்லை, நானும் அவர்களை சேர்த்துவைக்கவில்லை.
அடுத்தநாள் காலையும் சில பல இலைகளுடன் என்னை பார்த்து நீட்டியது பூசணி... என்ன செய்யலாம் என்று யோசித்தேன்........................
இதோ உட்க்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் அதற்கு ஒரு சொட்டு நீர் ஊற்றவில்லை.
என் வீட்டு வாசலில் பூசணிக்கொடி ,பாவம்!
Wednesday, July 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment